திங்கள், ஜூன் 24, 2013

விலங்குகளுடனான உடல் மொழி

போனவாரம் "பண்ணார்கெட்டா"  ஜூவிற்கு பொடியன் விபுலனைஅழைத்துப் போயிருந்தேன். எனது வீடு, ஜூவிலுருந்து பத்து கி.மீட்டரில் இருந்ததால், ஆ ஊ வென்றால் கிளம்பி விடுவோம்.  ஊரிலிருந்து யாராவது வந்திருந்தால், அவர்களுக்கு ஜூ கட்டாய தரிசனம் உண்டு. ஆனால்,  சில மாதங்கள் வெளிநாடு சுற்றித்திரும்பியிருந்ததால், இப்போது அப்போது என்று ப்ராமிஸ் செய்திருந்தபடி, விபுலனை வெளியே அழைத்து போக முடியவில்லை.  இந்த வாரம், கொட்டிகெரேவில் சாப்பிடப் போயிருந்தபோது, அப்போது விட்டால் முடியாது என்று மழையைய் பொருட்படுத்தாமல் கூட்டிப் போயிருந்தேன். மாலை ஆறு மணிக்கு குளோஸ் செய்து விடுவார்கள்.  ஐந்து மணிக்கு போய்ச்சேர்ந்தோம்.  நுழைவாயிலே தெரியவில்லை, மாற்றம் செய்திருந்தார்கள். நூற்றைம்பது கொடுத்து உள்ளேறினோம். மழையோ மழை.  கொடுத்த காசுக்கு வீண் செய்யவேண்டாமென்று, மழையிலேயே சுற்றிப்பார்த்தோம்.  மழையினாலோ என்னவோ எல்லா மிருகங்களும் சந்தோஷமாய் சுற்றித்திரிந்தன. புதிய அனுபவமாய் அமைந்த்து. விபுலன் எங்களை லீட் செய்தான். பைத்தான் என்ற மலைப்பாம்பின் கூண்டருகே சென்றோம். வழக்கத்துக்கு மாறாக, நான்கு முயலையும் உள்ளே விட்டிருந்தார்கள்.  கூண்டின் உள்ளே இரண்டு சிறிய ஷெல்டர் இருந்தது.  மலைப்பாம்பு உள்ளே நான்கில் ஒரு முயலை வளைத்தபடி ஒரு ஷெல்டரில் சுருண்டிருந்தது. இரண்டு இன்னொரு ஷெல்டரில் சுற்றித்திரிந்தன.  மூன்றாவது பாம்பின் அருகில் வெடவெடவென்று நடக்கப்போவதறியாமல் உட்கார்ந்திருந்தது.  அப்போது சாவைப்பார்த்தேன்.  அந்த முயலின் கண்கள் ஆரஞ்சுப்பழமாய் மிண்ணியது. மற்ற முயலின் கண்கள் போலில்லை.  பாம்பு தன் தலையை திருப்பி நாக்கை நீட்டிக்கொண்டு முயலை நோக்கி பண்ணிரண்டு அங்குல தொலைவில் குறி பார்த்தது.  பாம்பு ஏதோ சொல்ல வந்தது போலவும் முயலுக்கு கேற்காதது போலவும் அதைக்கூர்ந்து கேற்க, முயல் கூர்மையாயிருந்த பாம்பின் தலையருகே நேராய்ப்போனது.  ஹிப்னாடிசம்தான். சந்தேகமேயில்லை.  நொடியின் பின்ன நேரத்தில், பாம்பு சரேலென்று பாய்ந்து முயலின் தலையைப்பிடித்தது.  விபுலன் வீலென்று சந்தோஷத்தில் துள்ளினான். இதற்கு முன்பு ஒரு வேட்டையை அவன் நேரடியாய்ப்பார்த்தில்லை. ஏன், நானே அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில்லை.  திரும்பி வீடு வந்து சேரும்வரை, அந்த முட்டாள் முயலின் நினைவு அகலவில்லை.  பாம்பின் உணவு முயலாய் அல்லவா இருக்கிறது.  மேலும் பாம்பிற்கு ஹிப்நாடிச சக்தி இருக்க்வேண்டும். கராத்தே கிட் படத்தில் பாம்பின் கண்களை உற்றுப்பார்த்து பயிற்சி செய்யும் காட்சிதான் ஞாபகம் வந்தது.

கனக துரை மாமாவிற்கு பாம்புகளைக் கண்டால் பிடிப்பதேயில்லை. அவர் விவசாயம் பார்த்து வந்த மஞ்சள் காட்டில் அவை அடிக்கடி விஜயம் செய்து வந்தன. அவை நகரும் சத்தம் வைத்தே எத்திசையில் அவை இருக்கின்றன என்று ஊகித்து விடுவார்.  பின்பு சரசரவென அதன் பின் ஓடி எங்காவது மறையும்முன்னே அப்பாம்பின் வாலைப் பிடித்துவிடுவார்.  மூன்று நான்கு முறை சுழற்றி பனை மரத்தில் ஓங்கி அடித்து விடுவார்.  நாங்கள் பின்பு அதை கைகளில் தொட்டுப்பார்ப்போம்.  எடுத்து கழுத்தினில் சுற்றிக்கொள்வோம். கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சாரை என்று பாம்பின் வகைகளை அவ்வாறே அறிந்து கொள்வோம்.  பொதுவாக சிலபாம்புகள் துரத்த துரத்த திரும்பி பார்க்காமல் ஓடும். ஆனால், சில சடாரென்று திரும்பி படமெடுத்து ஆடும்.  லாவகமாக வாலைப் பிடிப்பதிலேதான் சூட்சுமம் இருக்கிறது.

ஒவ்வொரு முறை பொங்கலின் போது, மாடு பிடித்தல் எனும் விழா வருடம் தோறும் ஒருமுறை நிகழும். அதற்கு ஒவ்வொரு ஊரிலும் சலகெத்து (கோவில் மாடு) என்று நேந்து விடுவார்கள். அது எங்காவது மலையிலோ காட்டிலோ போய் மேய்ந்து வரும்.  ஆனால், பொங்கலின்போது கரெக்டாக வந்துவிடும். காணும்  பொங்கலுக்கு பத்து நாட்கள் முன்னதாக ஊர் களை கட்டத் தொடங்கி விடும்.  ஒவ்வொரு நாளும் மாலை, ஊர் இளவட்டங்கள் கூடி அந்த சலகெத்தை மரிப்பார்கள்.  ஊர் வட்டமாக நிற்க, இரு நீள கம்புகளுடன் ஒரு இளசு உறுமி தாளத்திற்கு ஏற்ப சலங்கை கட்டி மாட்டின் முன்னே போக்கு காட்டி ஓடுவார்கள்.  அந்த மாடும், அதற்கேப்ப முட்டுவது போல் போக்கு காட்டும். ஆனால் முட்டாது. அதற்கு ஆபத்து என்று படும்போது, பாய்ந்து வரும். ஆனால், அந்த மாட்டை உடல் மொழியால் கட்டுக்குள் கொண்டுவந்து இசைக்கு தகுந்தாற்போல் சுற்றி சுற்றி வருவார்கள்.  கிராமத்தின் எல்லா வீட்டிலிருந்தும் ஒரு பொடுசாவது இரண்டு நான்கு முறை விளையாடிவிடுவார்கள்.
பொதுவாக,  மாடுகளை அடக்கி கட்டுக்குள் கொண்டுவர மூக்கணாங்கயிற்றை பயண்படுத்துவார்கள். மாட்டின் மூக்கில் கயிற்றை நுழைத்துக் கட்டியிருப்பார்கள். திமிறினால், இக்கயிறை பிடித்து இழுக்கலாம். வலியில், மாடு சொன்ன பேச்சு கேட்கும்.  இதெல்லாம் தேவையிராது. உடல் மொழியாலே கட்டுப்படுத்தலாம்.  இந்த கயிறெல்லாம், சலகெத்துக்கு கிடையாது, உடல் மொழியாலும் கொம்பைப் பிடித்தும்தான் கட்டுப்படுத்த வேண்டும்.

வெளியூரிலேயே பள்ளி கல்லூரியில் படித்ததால், மாதமிருமுறையாவது வார இறுதிகளில் வீட்டிற்கு போய்விடுவேன்.  காமிக்ஸ் கதையில் வரும் ஜேம்ஸ்பாண்டு போல விமானம், கப்பல், ரயில், ஜீப், வைக்கோல் மாட்டு வண்டி என்று சாகசப்பயணம் போலதான் டிராவல் செய்வதுண்டு.  தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் கல்லூரி இருப்பதால், மப்சல் வண்டிகள் நிக்காது. பீகாரோ ஜாம்செட்பூரோவிலிருந்து வரும் லாரிகளில் லிப்ட் கேட்டு, கோவை வந்து, டவுன் பஸ்ஸில் ஏறி,  நாளைக்கு இரண்டு ஆக்ஸிடெண்டு செய்யும் தனியார் விரைவுப் பேருந்தில் ஏறி, பழனி செல்லும் கூட்டத்தில் தொங்கி, இறங்கி ஐந்து கிலோ மீட்டர் நடந்துதான் தோட்டத்து சாலையை அடைய முடியும்.  வழக்கம் போல நண்பர்களுக்கு முன்னுரிமை தந்து ஊர் சுற்றிய பின்னரே புறப்படுவதால், ஊர்  வந்து சேற 11 மணியாகிவிடும். நடு சாமத்தில், சுடுகாட்டையெல்லாம் தாண்டி, ஊர் எல்லையில் இருக்கும் வீட்டு நாய்களிடமெல்லாம் தப்பித்து, புதர் மண்டிக்கிடக்கும் வரப்புகளில் குருட்டு நம்பிக்கையில் பாம்பை மிதிக்காமல் நடந்து, பேய்கள் தூங்கும் புளிய மரங்கள் கடத்து வீடு வந்து சேரவேண்டும்.  கரண்ட் செக் செய்ய வரும் செக்கரா என்று ஆராய்ந்த பின்னரே வீட்டைத் திறப்பார்கள்.  வீட்டு நாய்கள் பரவாயில்லை. வீட்டை நோக்கி வருபவரையோ, அல்லது பயந்து ஓடுபவரையோதான் விடாமல் துரத்தும். பயந்து கொள்ளாத மாதிரி விறைப்பாக அதே சமயம் ஓனர் போல செல்லமாக விரட்ட வேண்டும்.

நகரங்களில் இருக்கும் விலங்குகள்தான் கடித்து விடுகின்றன.  பொள்ளாச்சியில் இருந்த போது,  விஜயாக்கா மகன், குரங்கிடம் போய் வீரம் காட்டி கடி வாங்கிக்கட்டியதோடு, பட்டப் பெயரும் கட்டிக்கொண்டான்.  நந்தி ஹில்ஸில் மிரட்டினால், கடிக்க வருகின்றன குரங்குகள். விபுலனின் டிபன் பாக்ஸை கடத்திச் சென்று ஓபன் பண்ணி தின்றன. ஏன் அபார்ட்மெண்டிலேயே, சனிக்கிழமை தோறும்,  புண்ணிய ஆத்மாக்கள் ஆஞ்சநேயருக்கு பழம் கொடுத்து வளர்க்கிறார்கள்.  பால்கனி திறந்திருந்தால் ஆஞ்சநேயர் பழங்களை அவரே எடுத்துக்கொள்வார்.  மேனேஜ்மெண்ட் கமிட்டியில் ரிலீஜியஸ் ப்ரச்சினையாக உருமாறி நிற்கிறது.

நள்ளிரவில் நடந்து வருபவர்களுக்கு தெரியும் தெருநாய்கள். கூட்டமாகத்தான் திரியும்.  ஒன்றின் பார்வையில் கூட படாமல், இருட்டிலேயே நடத்து எஸ்கேப் ஆகவேண்டும்.  ஒன்று மட்டும் மோப்பம் பார்த்து பின் தொடர்ந்தால், அனைத்தும் கூடி விடும். குலைக்க ஆரம்பித்தால், ஓடவும் முடியாது.  மூன்று மாதத்திற்கு முன் நம் ஜானியின் காலை கார் விட்டு ஒடித்த காரின் ஓனர் இவன்தான் என்று சிலது எண்ணிக்கொண்டு வண்மம் தீர்க்கப் பார்க்கும்.  அப்பொழுது பார்த்து வீட்டில் போய் சாப்பிடலாம் என்று பார்சல் வாங்கி வந்திருந்தால், நாய்களுக்கு கொடுத்துவிட்டு பட்டினி கிடப்பது மேல்.

நகர மனிதர்களைப் போலவே இவைகளுக்குமான உடல்மொழிதான் புரிபடவே மாட்டேங்குது!