திங்கள், நவம்பர் 15, 2010

பெங்களூரு புத்தக கண்காட்சி - 2010

பெங்களூரில் இன்று புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஏதாவது ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிவரலாம் என்றுதானிருந்தேன். 200 ரூபாய்தான் பட்ஜெட்.  ஆனால் கிட்டத்தட்ட 1500 அழுதுவிட்டுதான் வரவேண்டியிருந்தது.

எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கோ இல்லையோ, புத்தகம் வாங்கும் பழக்கம் இருக்கிறது. சுஜாதா போல எழுத்தாளராக இருந்தால், இதைப்படி அதைப்படி என்று இனாமாகவேனும் புத்தகங்கள் தேடிவரும். நான் என்ன செய்ய, சொந்தக்காசில்தான் வாங்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு "தீம்"-ல் புத்தகங்கள் வாங்கிக் குவிப்பேன். ஆரம்ப காலங்களில் கணிப்பொறி programming புத்தகங்கள். இப்பொழுது அதற்கு வேறு source இருப்பதனால், அது வாங்கத்தேவையில்லை. சென்ற முறை general computers and must have books for a software professionals வாங்கிக்குவித்தேன். தற்பொழுது கொஞ்சம் யோகா, ஆன்மீகம், சுயநோக்கு மற்றும் மாற்று வைத்திய முறைகள் என்று ஒரு ஆர்வம் வந்திருப்பதனால், அந்த புத்தகங்களே அதிகம் வாங்கினேன். அவற்றின் பட்டியல் பின் இணைத்துள்ளேன். தமிழ் புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன்.  ஆங்கில புத்தகங்கள் எதிலும் இப்பொழுது ஆர்வமில்லை. பொதுவாக அவை how to attain simple goals என்கிற முறையிலேயே உள்ளன. முழுமையான வாழ்வைப் புரியவைப்பதில்லை. அவை மனதோடு ஒட்டுவதுமில்லை.  ஆனால் technical books-களில் அவைகளை அடித்துப்போட வேறு கிடையாது.

தியானமும் யோகாவும் ஆன்மீகமாக மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கைக்கும் உதவுவதால், அதை முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் என்று விழைந்தேன். சிறுவயதில் பழகிய வேதாத்ரி மகரிஷியில் தொடங்கினேன். சிறிது சிவானந்தா, ஸ்ரி ஸ்ரி, வெளி நாடு, பவுத்தம், ஜென் என்று அலைந்தேன். இவை எல்லாவற்றையும் விட சித்தர்களின் methods தான் கொஞ்சம் ஒட்டுவதாக தெரிந்தது. பெரியாரையும் கொஞ்சம் படித்திருந்ததால் எல்லாம் கொஞ்சம் குழப்பமாகவே தெரிந்தது. பவுத்தம் பரவாயில்லை. சித்தர்கள் கொஞ்சம் பகுத்தறிவுக்குப் பக்கத்தில் இருந்ததாக பட்டது. மற்ற நிறையவற்றில் மூடநம்பிக்கைள் மலிந்திருந்ததாக எண்ணினேன்.  பயணம் தொடர்கிறது. பார்ப்போம்.

இந்த முறை வாங்கிய புத்தகங்கள்

1. சத்குரு. ஞானத்தின் ப்ரம்மாண்டம்.

சத்குருவின் உரையாடல் மூலமாக பல கருத்துக்களின் விளக்கங்கள். பொதுவாக ப்ராமணர் அல்லாத குருக்களின் வழி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று வாங்கினேன்.

2. ஒரு வினாடி புத்தர் (சத்குரு)

அப்பப்போ வாழ்க்கை போரடித்து விடுகிறது. அப்போது, இம்மாதிரியான கட்டுரைகளை படிக்கும்போது மறுபடியும் ஒரு பிடிப்பு வருகிறது. வாழ்க்கையை திரும்பிப் பார்க்கவும் சரியாக பார்க்கவும் பயன்படுகிறது.

3. விவசாயி - நமது வளர்ப்புத்தாய்

விவசாய குடும்பமாக இருந்தாலும், செய்முறையாக செய்ததில்லை. என் தந்தையின் காலத்தோடு இத்தொழிலில் ஈடுபடுதல் முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால், புத்தக அறிவையாவ தெரிந்துகொள்ளலாம் என்று ஒரு எண்ணம். பின்னால் எப்போவாவது பார்ப்போம்.

4. தாத்தா சொன்ன கதைகள் (கி. ரா)
5. கி. ரா பக்கங்கள்

கி. ராவின் எல்லா புத்தகங்களையும் படித்து விடுவதாக ஒரு உத்தேசம்.  அற்புதமான எழுத்து. பொதுவாக கிராமங்களைப் பற்றியும், ரொம்ப சுலபமான நடையில் எழுவதாலேயும், இலகுவான வழிமுறைகளில் வாழ்க்கையை அணுகுவதாலேயும் பிடித்திருக்கிறது.

6. புதிய காலம் - ஜெயமோகன்.

சமகால இலக்கியங்களின் ஒரு மதிப்பீடு. பொதுவாக நாவல்களிலும், இலக்கியங்களிலும் பெரிதாக ஈடுபாடு இல்லாத போதிலும், இதில் என்ன கிடைத்துவிட போகிறது என்று ஒரு ஆர்வமுண்டு. இவ்வாறான மதிப்பீடுகளை படித்து விட்டால், இவ்வாறான படைப்புகளை நாம் படிக்கும்போது நமக்கு எப்படி தோன்றுகிறது என்று ஒப்பிட்டுப் பார்த்துவிடலாம். முக்கியமாக, காவல்கோட்டம் பற்றிய கட்டுரைக்காக வாங்கினேன்.

7. நலம் - சில விவாதங்கள். - ஜெயமோகன்.

மாற்று மருத்துவ முறைகளை பற்றி சில கருத்தாடல்கள்.  பொதுவாக, வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளுக்கும், எளிதான தீர்வுகள் எப்போதும் இருப்பதாக என் எண்ணம். ஆயுர்வேதம் அவ்வாறான ஒரு தீர்வு. சரியான காலத்தில் சிறிதாக கவனம் எடுத்துக்கொண்டால் பெரிதான தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டாம். என்ன புதிய தகவல் கிடைக்கும் என்று பார்ப்போம்.

8. சித்தர் பாடல்கள் தொகுப்பு

எல்லா யோக முறைகளும் ஒன்றுக்கொன்று பெரிய வித்யாசமில்லை போல தோன்றுகிறது.  பதஞ்சலியிலிருந்துதான் வந்ததாக இருக்கிறது. வெவ்வேறு வழிகளில் தெரிந்து, குருவின் மேல் சந்தேகப்பட்டு குழம்புவதைவிட, மூலத்தையே தெரிந்துகொண்டால்தான் என்ன. ஆனால், எனக்கு வடமொழியில் அவ்வளவாக ஈடுபாடில்லை. சித்தர்களே அருமையாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு reference-க்காக வாங்கி வைத்துள்ளேன்.



9. திருமந்திரம் - திருமூலர். உரை - ஞா. மாணிக்கவாசகன்.

அற்புதமான நூல். இதைப் படித்தாலே போதும். எல்லா யோக முறைகளும் அடங்கியிருப்பதாக எண்ணுகிறேன்.

10. காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை - தம்மண்ண செட்டியார்.

கடசியாக பார்த்தேன். வாங்கலாமா வேண்டாமா என்று கூட யோசித்தேன். எல்லா சித்தர்களின் சாராம்சங்களையும் குறுந்தகடு போல சொல்லியிருந்தார்.

11. ஜென்னும். ஜென் தியானமும்
12. ஓஷோவின் புத்தரின் வழி - தம்ம பதம்

எல்லா நல்ல புத்த நூல்களையும் வாசித்துப் பார்க்க ஆவல். ஆனால், எதுவும் நல்ல தமிழ் நடையில் இல்லை. புரிந்துகொள்ள சிரமமாக உள்ளது. மேலும், புத்தரின் வழியையும், அதை அணுக படிக்கவேண்டிய நூல்களையும் யாராவது விளக்கினால் பரவாயில்லை. இப்புத்தகங்கள் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. ஒரு பாகம் மட்டும் வாங்கினேன். நன்றாக இருந்தால் மேற்கொண்டு படிக்கலாம்.